பொழுதுபோக்கு
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
ஒரு முஸ்லிம் தனது வாழ்வைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ள வேண்டும்.
தன் தேவைகேற்ப நேரத்தை வகுக்கும்போது ஓய்விற்கும் பொழுது போக்கிற்கும் ஒரு பங்கை வழங்க
வேண்டும். தமது பொழுதைக் கழிப்பது குறித்து எந்தக் கவலையுமற்றவர்கள் தங்களுடைய நேரத்தை
மட்டுமல்ல அடுத்தவர்களின் நேரத்தையும் வீண்விரயம் செய்து விடுகிறார்கள். உண்மையில்
மனிதன்,
தன் களைப்பை நீக்கி இளைப்பாறுவதற்கும்,
இறையருளைத் தேடிப் பெற்றுக் கொள்ளவதற்கும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமே
ஓய்வு நேரமாகும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “இன்னும் தன்னருளால் இரவையும் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான்.
(இரவை) அதில் நீங்கள் இளைப்பாறுவதற்கும், பகலை நீங்கள் (அதில்) அவனுடைய அருளை தேடிக் கொள்வதற்கும் இன்னும்
நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு ஆக்கியுள்ளான்)”
(28:73)
நேரத்தைப் பயனுள்ள விதத்தில் கழிக்க இஸ்லாம் வழிகாட்டுகிறது.
உடலைப் போன்றே உள்ளமும் உழைப்பால் சோர்வடைகின்றது. இதனால் தான் “அடிக்கடி உங்கள் உள்ளங்களுக்கு ஓய்வைக் கொடுங்கள். ஏனெனில் சோர்வுற்ற
உள்ளம் இருளடைந்துவிடும்” என அலி(ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தமான
போதனைகளையே வழங்குகின்றது. யதார்த்த வாழ்விற்கு அப்பாற்பட்ட வழிகாட்டல்களோ, மலக்குகளுக்கு மாத்திரம் பொருத்தமான போதனைகளோ இஸ்லாத்தில் இல்லை.
மனிதனின் ஒவ்வொரு வார்த்தையும் திகிர் ஆகவும், அவன் செவிமடுக்கும் ஒவ்வொரு வசனமும் அல்குர்ஆனாகவும், அவன் கழிக்கும் ஒவ்வொரு கணப் பொழுதும் இஃதிகாபாகவும் இருக்க
வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பாக்கவில்லை. மனிதன் உண்டு, பருகி வாழ்வது போலவே, சிரித்து, மகிழ்ந்து, ஓய்வெடுத்து வாழவும் வேண்டுமென அது வழிகாட்டுகிறது.
மனிதன் எப்போதும் கவலையுடனும், சொர்வுடனுமே இருந்து விடக்கூடாது. மகிழ்ச்சியோடு இருப்பதையும், மகிழ்ச்சியோடு இருப்பதையும், மகிழ்ச்சியைத் தருகின்றவற்றையும் நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
கவலையோடு இருப்பதையும், கவலையை உண்டாக்குகின்ற வற்றையும்களையும் அவர்கள் வெறுத்தார்கள். துன்பங்களிலிருந்தும்
பாதுகாப்புத் தேடிப் பிரார்த்தித்தார்கள்.
தங்களது வாழ்கையை யதார்த்தபூர்வமாக அமைத்துக் கொண்ட நபி(ஸல்)
அவர்கள்,
சிலவேளைகளில் மற்றவர்களோடு விகடமாகவும் நடந்து கொண்டுள்ளார்கள்.
ஒரு முறை ஒரு வயோதிபப் பெண் தனக்கும் சுவர்க்கம் கிடைக்குமா என்க் கேட்டார். அதற்கு, ‘வயோதிபர் சுவர்க்கம் செல்லமாட்டார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பெண் அழத்தொடங்கினார்.
அப்போது ‘இல்லை,எல்லோரும் குமரிப் பருவமுடையவர்களாகவே சுவர்க்கம் நுழைவார்கள்’ எனக் கூறினார்கள். இது ஆகுமான பரிகாசங்களில் பொழுதைக் கழிப்பதற்கு
இஸ்லாத்தில் அனுமதியுண்டு என்பதற்கு ஓர் ஆதாரமாகும். உள்ளத்திற்கு ஆறுதல் தரும் பகிடி
பரிகாசங்கள் இஸ்லாம் காட்டிய வரையறைக்குள்ளேயே அமைதல் வேண்டும். ஹலாலான விளையாட்டுகளில்
ஓய்வைக் கழிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதனை வரவேற்கிறது. ஆரோக்கியமும், பலமும் உள்ளவனாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கின்றது.
“பலசாலியான ஒரு முஃமின் பலவீனமான ஒரு முஃமினைவிட சிறந்தவனும்
அல்லாஹ்விற்கு மிக விருப்பமுடையவனுமாவன்” (முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள். உடலைப் பலப்படுத்தி, உள்ளத்தை உற்சாகப்படுத்தும் விளையாட்டுகளில் நபி(ஸல்) அவர்களும்
ஈடுபட்டிருகிறார்கள். அவர்கள் தங்களது மனைவி அயிஷா(றலி) அவர்களோடு இரண்டு தடவைகள் ஓட்டப்
பந்தயத்தில் ஈடுபட்டிருகிறார்கள். முதற் தடவை அயிஷா(றலி) அவர்களும் இரண்டாம் தடவை நபி(ஸல்)
அவர்களும் வெற்றி பெற்றதாக ஹதீஸில் இடம் பெற்றிருகிறது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில்
“ருகான” என்பவன் பெயர் பெற்ற வீரனாக விளங்கினான். நபி(ஸல்) அவர்கள் அவனுடன்
மல்யுத்தம் புரிந்து அவனை தோற்கடித்துள்ளர்கள்.
இங்கனம் ஒருவன் தன் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும். அதனைப்
பலப்படுத்திக் கொள்ளவும் உடற்பயிற்சிகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.
ஓய்வு நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கான வழிகாட்டல்களை பெற்றோர்
தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். ஒருமுறை அம்பெறிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களோடு
சேர்ந்து நபி(ஸல்) அவர்களும் அம்பெறிந்து விளையாடியிருகிறார்கள். “நீங்கள் அம்பெறியுங்கள் – குதிரைச் சவாரி செய்யுங்கள்” (முஸ்லிம்) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் “உங்கள் குழந்தைகளுக்கு நீந்தவும், அம்பு எறியவும், குதிரைகள் மீது சவாரி செய்யவும் கற்றுக்கொடுங்கள்” எனவும் போதிதுள்ளர்கள்.
இதைத் தவிர சிறந்த நூல்களை வாசிப்பதற்கும் ஓய்வு நேரங்களைப்
பயன்படுத்தலாம். திருக்குர் ஆனில் முதலாவது அருளப்பட்ட வேத வாக்கியம் “வாசிப்பீராக” என்று நமக்கு கட்டளையிடுகிறது. ஆகவே நமக்குப் பயனுள்ள அறிவைத்
தரக்கூடிய சிறந்த நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள்
ஆகியவற்றை வாசிப்பதில் ஓய்வு நேரங்களை கழிக்கலாம்.
ஓய்வுநேரங்களில் நமக்கு பயன் தரும் விதத்தில் வீட்டுத் தோட்டச்
செய்கையில் ஈடுபடுவதும் விரும்பத்தக்கதாகும். பயன்தரும் பயிர்ககளையும், மரங்களையும் நடுவது சிறந்ததொரு தர்மமாகும். “ஒரு முஸ்லிம் பயிர் ஒன்றை நடுகிறான். அதிலிருந்து ஒரு மனிதனோ, மிருகமோ, பறவையோ சாப்பிட்டாலும் அப்பயிரை நட்டியவனுக்கு அது ஸதகாவாக மாறும்” (முஸ்லிம்) என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது பொழுது போக்கை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள
வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட காலத்தை வீணான பொழுதுபோக்குகளில் கழித்துவிடக்கூடாது.
வாழ்க்கை என்பது காலத்தோடு நடத்தும் போராட்டமாகும். அதனை விரயம் செய்வது தனிமனிதனையும், சமுதாயத்தையும் பாழ்படுத்திவிடும். “மக்கள் மறந்திருக்கக் கூடிய இரண்டு அருள்கள் உள்ளன. அவை ஆரோக்கியம்மும், ஓய்வும் ஆகும்” (புகாரி,முஸ்லிம்) என காலத்தின் வலிமையையும், மதிப்பையும் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிபிட்டுள்ளர்கள்.
வாழ்க்கை என்பது அல்லாஹ் நமக்களித்த விலைமதிக்க முடியாத அருட்கொடையாகும்.
இந்த வாழ்கையை நாம் எப்படிச் செலவிட்டோம் என்பது குறித்து அவன் மறுமையில் எங்களிடம்
விசாரிப்பான். எனவே வாழ்வே பொழுதுபோக்கு என்றில்லாது அவசியமானபோது அனுமதிக்கப்பட்ட
பொழுது போக்குகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் வரவேற்கிறது.
அவை மனித உடலுக்கோ, உள்ளத்திற்கோ தீமை தராதவைகளாக இருக்க வேண்டும். ஹராமான அம்சங்கள்
அதில் கலந்திருக்கக்கூடாது. தொழுகை போன்ற அடிப்படைக் கடமைகள் உரியநேரத்தில் நிறைவேற்ற
தடையாக அமைந்து விடக்கூடாது. மாறாக வாழ்க்கைக்குப் பயன் தேடித் தரக் கூடியதாக இருத்ததல்
வேண்டும். இத்தகு அம்சங்கள் பொதிந்த பொழுதுபோக்குகளையே இஸ்லாம் அனுமதிக்கிறது.
எனவே, இவ்வாறான பொழுதுபோக்குகளில் நாம் ஈடுபட்டு எமது உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமுள்ளதாக வைத்துக்கொள்வோம்.
This comment has been removed by the author.
ReplyDelete