Thursday, August 31, 2017

உலக வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம். அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)

உலக வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்.
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
வாழ்வின் எல்லாத் துறைகள் பற்றியும் இஸ்லாம் தனித்துவமான கண்ணோட்டத்தை செலுத்துகிறது. அந்த வகையில் உலக வாழ்வு பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை இங்கு நோக்குவோம்.
பொதுவாக உலக வாழ்வு பற்றி , மனிதன் எண்ணக்கருத்துக் களையும் , கண்ணோட்டங்களையும் கொண்டிருகின்றானோ அதற்கு அமையவே அவனது செயற்பாடுகள் யாவும் அமையும். உலகப் பிரச்சினைகளிலும் துன்பங்களிலுமிருந்து விடுபட வேண்டுமானால் மனிதன் தனது ஆசைகளை ஒடுக்கி, உலகைத் துறந்து வாழ வேண்டும் எனக் கருதுவோரும் உள்ளனர்.
உலக வாழ்வு நமக்களிக்கப்பட்டுள்ள ஒரேயொரு சந்தர்ப்பமாகும். ஆதலால் அதை நன்றாய் அனுபவித்து, சுகித்து வாழ வேண்டும் எனக் கருதுவோரும் உள்ளனர். இஸ்லாம் இவ்விரு கருத்துக்களை விடவும் வேறுபட்ட ஒரு கருத்தை கொண்டிருக்கிறது. 
இஸ்லாம் உலக வாழ்வை கூறு போடவில்லை. மறுமைக்காக உழைப்பதுடன், உலக வாழ்வு செழிக்கவும், மனித வாழ்வும் வளம் பெறவும் ஒவ்வொரு முஸ்லிமும் செயற்பட வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது. உலகின் வசதி வாய்ப்புகளையும், சாதனங்களையும் பயன்படுத்தி உலகை வளப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு அல்லாஹ் வேண்டுகிறான். விவசாயம், கைத்தொழில், விஞ்ஞான முயற்சிகளினுடாக பூமியை வளப்படுத்துவது உலகியற் செயற்பாடாக மட்டும் இருந்திருந்தால் அல்லாஹ் இதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கமாட்டான். பூமியை வளப்படுத்தும் இந்தப் பணி இமாரத்என வழங்கப்படுகிறது. இச்செயற்பாடும் ஓர் இபாத்தத் ஆகும்.
உலக வாழ்விற்காக மனிதன் தனக்கும் தனது சமூகத்திற்கும் செய்யக்கூடிய நன்மை பயக்கத்தக்க ஆக்கபூர்வமான எல்லாச் செயற்பாடுகளும்  இபாதத்தாகவே கருதுகிறது. அநியாயம் செய்யும் நோக்கமோ, அத்துமீறும் நோக்கமோ இன்றி எவரொருவர் ஒரு கட்டடத்தைக் கட்டுகிறாரோ அல்லது ஒரு பயிரை நாடுகிறாரோ அதனைக் கொண்டு ரஹ்மானுடைய படைப்புக்கள் பயனடையும் காலமெல்லாம் அவருக்கு நிலையான நற்கூலி கிடைத்துக்கொண்டேயிருக்கும் (அஹ்மத்) என்றும், ‘ உனக்கு நீ உணவளிப்பதும், உன் குழந்தைக்கு நீ உணவளிப்பதும், உன் மனைவிக்கு நீ உணவளிப்பதும் உனக்கு தர்மமாக அமையும். (அஹ்மத்) என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிபிட்டுள்ளார்கள்.
வெளிப்பார்வைக்கு நாம் உலகியற் செயற்பாடக எண்ணுகின்ற இவ்வாறனவற்றிற்கு அல்லாஹ்மதிப்பளித்து, அவற்றை இபாதத்ஆக மாற்றி கூலியும் வழங்குகிறான். என்பது கவனிக்கத்தக்கதாகும்.
உலக வாழ்வை முற்றாகப் புறக்கணித்து அதனைத் துறந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. துறவறம் இஸ்லாத்தில் இல்லை (அஹ்மத்) என்பது ஹதீஸாகும். உலக வாழ்வை முற்றாகத் துறந்து தம்மை வணக்கத்திலும், வழிபாட்டிலும் ஈடுபடுதிக் கொள்ளம் முனைந்த மூன்று ஸகாபாக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். இரவில் நான் தொடர்ந்து நின்று வணக்கப் போகிறேன்என்று முதலாமவரும், “காலமெல்லாம் நான் நோன்பு நோற்கப் போகிறேன்என்று இரண்டாமவரும் நானோ தொடர்ந்து மனைவியை விட்டு ஒதுங்கி வாழப்போகிறேன்என்று மூனறாமரும் கூறியபோது, “உங்களில் அல்லாஹ்வை மிகவும் அஞ்சி நடப்பவனாகிய நானோ, இரவில் நித்திரை செய்கிறேன். வணக்கமும் செய்கிறேன், நோன்பு நோட்கிறேன், நோன்பு நோற்காமலுமிலிருக்கிறேன். மணவாழ்விலும் ஈடுபடுகிறேன். (புஹாரி) என்று நபி(ஸல்) அவர்கள் உபதேசித்தர்கள். கடைசியாக என் வழிமுறைகளைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர் எனவும் எச்சரிக்கை செய்தார்கள்.
உலக வாழ்வையும், அதன் இன்பங்களையும் முற்றாகத் துறந்து வணக்க வழிபாடுகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலக வாழ்வைப் புறக்கணித்து வாழ்வது இஸ்லாமிய வாழ்வாகாது. அதலால் ஆன்மீகத் துறைக்கு அளவு கடந்த ஈடுபாடு காட்டி ஆன்மிகத் துறையை புறக்கணிக்கவும் கூடாது. இம்மை, மறுமை ஆகிய இரு வாழ்வுக்குமிடையில் சமநிலை பேணப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.
அல்-குர்ஆன் வசனங்களை முழுமையாகவும் பிழையின்றியும் விளங்கி கொள்வதனால் உலக வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் இடையில் சமநிலைத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளலாம். குர்ஆனின் குறித்த சில வசனங்களை மட்டும் நோக்கும் ஒருவர் உலக வாழ்வு அற்பமானது; பெறுமதியற்றது; ஏமாற்றி விடக்கூடியது; சோதனைக்குரியது; மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடக்கூடியது என்ற முடிவிற்கே வருவார். வேறு சில வாசனங்களோ உலக வாழ்வு பெறுமதியானது என்ற கருத்தை உணர்த்துகின்றன.
உலக வாழ்வு அற்பமானது. உலக வாழ்வு பெறுமதியானது என்ற வித்தியாசமான இரு கருத்துக்களை தரும் அல்குர்ஆன் வசனங்களை நாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது எமக்குத் தெளிவான ஒரு கருத்துக் கிடைக்கின்றது. அதாவது மறுமை வாழ்வின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டு நோகும் போது இவ்வுலக வாழ்வு அற்பமானதே. அதே நேரம், மறுமை வாழ்வைச் சென்றடைய இவ்வுலக வாழ்வு அவசியமானது. ஏனெனில் இவ்வுலகம் மறுமைக்கான பயிர் நிலமாகும். ஆதலால் இதனைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். மறுமைக்குச் செல்வற்குரிய பாலமாகக் காணப்படும் இவ்வுலக வாழ்வை நாம் புறக்கணித்தால் எவ்வாறு அங்கு சென்றடைய முடியும்? இந்த வகையில் இவ்வுலக வாழ்வும் பெறுமதியானதாக அமைகிறது.
எனவே. ஒரு முஸ்லிமுக்கு இவ்விரு வாழ்வும் முக்கியமானவை. அவன் இரண்டையும் கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும். உலக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்ட்டோரை அல்குர்ஆன் இகழ்கின்றது. உலகையும், மறுமையையும் இணைத்து பார்போரை அல்குர்ஆன் புகழ்கின்றது. இது தவிர மறுமையை மாத்திரம் எதிர்பார்கின்ற ஒரு குழுவினரை அல்லாஹ் விரும்பவில்லை. அவ்வாறு வாழ்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். ஆகையால் இவர்கள் பற்றி அல்குர்ஆன் ஏதும் குறிப்பிடவில்லை.
எங்கள் இறைவனே எங்களுக்கு (வேண்டியவைகளை யெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாகஎன்று கோருவோரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால் இத்தகையோருக்கு யாதொரு பாக்கியமுமில்லை. அன்றி எவர்கள் எங்களிறைவனே எங்களுக்கு இம்மையிலும் நன்மை அளிப்பாயாக, மறுமையிலும் நன்மை அளிப்பாயாக. நரகநெருப்பின் வேதனையிலிருந்து எம்மைக் காப்பாற்று வாயாகஎனக் கோருவோரும் அவர்களில் உண்டு. தங்கள் வினையின் பாக்கியம் இவர்களுக்கு உண்டு. தவிர அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவனாவான். (2:200-202)

இவ்வுலக வாழ்வு பற்றியும், மறுமை வாழ்வு பற்றியும் தெளிவான கண்ணோட்ட முடையோர் இவ்வுலக வாழ்வின் உயன்மையான பெறுமதியை அறிந்து இஸ்லாம் காட்டும் வழிமுறைக்கு ஏற்ப தம் உலக வாழ்வை நன்மை பயக்கக் கூடியதாக அமைத்துக் கொள்வர். ஆகவே நாமும் இவ்வழிகாட்டல்களை ஏற்று நடப்போம்.


No comments:

Post a Comment